இந்தியாவிற்கு எதிரான அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று திறமையை நிரூபிப்போம் என இலங்கை அணியின் இடைக்கால அணித்தலைவர் கபுகேதரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது.
நாளை 3-வது போட்டி பல்லேகலே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா உள்ளது.
இந்தியாவுடனான போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே உலகக் கிண்ணம் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற கட்டாயத்தில் இலங்கை அணி உள்ளது.
இதனிடையே நாளைய போட்டி குறித்து கபுகேதரா கூறுகையில், எங்களது அணி திணறிக் கொண்டிருக்கிறது என்று நினைக்கவில்லை. அணி வீரர்களுக்குள் நல்ல சூழல் இருந்து வருகிறது.
2-வது போட்டிக்குப் பிறகு எங்களால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. ஒரு தடையை தாண்ட வேண்டும். இதை சுற்றியே எல்லா விஷயங்களும் இருக்க வேண்டும்.
கடந்த போட்டியில் தோல்வியடைந்தது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால், அந்த தோல்வியை நேர்மறையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
வீரர்கள் தோல்வியில் இருந்து மீண்டெழுந்து சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்புகிறேன். அணித்தலைவர் பணி மிகச்சிறந்த கவுரவம். இந்த வாய்ப்பை பெற்றதால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
2-வது போட்டியில் இலங்கை அணி மெதுவாக பந்து வீசியதற்காக அந்த அணியின் தலைவர் தரங்காவிற்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், கபுகேதரா அணித்தலைவராக இலங்கை அணியை வழி நடத்த உள்ளார்.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !